திங்கள், 26 ஏப்ரல், 2010

அரசு எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ள ஒத்துழைப்பு வழங்குங்கள்

புதிதாக நியமனம் பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து
அரசு எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ள அமைச்சுக்களின் செயலாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்வதன் மூலம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அமைச்சு செயலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சு செயலாளர்களிடம் வேண்டிக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நேற்று (25) மாலை அலரி மாளிகையில் சந்தித்து அவர்களுக்கான பதவிக் கடிதங்களை கையளித்தார். அதன்பின் அவர்களிடம் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு அல்லது மாவட்டத்துக்கு என்று மட்டும் இல்லாது நாட்டின் அனைத்து மக்களினதும் நலன் பேணல் நடவடிக்கைகளில் செயற்படுவது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பாகும்.
குறிப்பாக அபிவிருத்தியடையாத பிரதேசம் அல்லது மாவட்டம் தொடர்பாக அதிக அக்கறை காட்டி அப் பிரதேசங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை தத்தமது அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி அவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானதாகும்.
மிகப் பெரிய மக்கள் நம்பிக்கையுடன் அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு ஏற்ப நாட்டை கட்டியெழுப்பும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை: