ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு வெளிநாடுகளில் இயங்கும் பிரிவினைவாதிகள் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலிகளை மீளக்கொண்டு வந்து அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒருபகுதியினர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;பிரிவினைவாத இயக்கத்தை அடக்குவதும் அதன் பிரசாரத்தை உரிய முறையில் கையாள்வதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் தந்திரோபாயத்தின் பிரதான அங்கமாக இருக்கவேண்டும். அரசியல் விளைவுகளை பொருட்படுத்தாமல் பிரிவினைவாத உணர்வுகளை மேம்படுத்தும் உள்நாட்டு சக்திகளுக்கு எதிராக புதிய அரசாங்கம் முழு அளவில் செயற்பட வேண்டும்.

பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான புதிய சட்டவிதிகளை அடுத்த பாராளுமன்றம் அறிமுகப்படுத்தவேண்டும். பிளவுபட்ட அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரணிக் கட்சிகளுக்கோ அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிகளுக்கோ இடமளிக்கக் கூடாது.

முன்னைய அரசாங்கங்கள் புத்திசாதுர்யமாக செயல்பட்டிருந்தால் புலிகள் 30 வருடங்களாக நீடித்திருக்க முடியாது. இலங்கைக்கு எதிரான புலம்பெயர்ந்த தமிழர்களில் புலிகள் சார்பான பிரிவினர் அதிகளவில் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். வெளிநாட்டு அரசியல்வாதிகளின் மனதை வென்றெடுக்க உலகத் தமிழர் பேரவை ஆதரவு தேடியது. இந்த நிலைமையை வெளிப்படுத்துவதாக பிரிட்டனில் இடம்பெற்ற உலகத்தமிழர் பேரவையின் சந்திப்பில் பிரிட்டனின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டமை காணப்படுகிறது.

எதிரியின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். சர்வதேச மட்டத்தில் எதிரிக்கு நிதி வளங்கள் உள்ளன.பிரிட்டிஷ் தொழில் கட்சிக்குள் இஸ்லாமிய அடிப்படை வசதிகள் ஊடுருவியிருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாதிரியான உபாயத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களும் உள்வாங்கக் கூடும்.

அடுத்த 6 வருடங்களும் மிகவும் முக்கியமானவையாகும். புலிகளின் சகாப்தம் முடிவடைந்த பின்னரான முதலாவது அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவினைவாத அச்சுறுத்தலை வேறுபட்ட முறையில் கையாள வேண்டியுள்ளது. ஆயுதங்கள் அவர்களிடம் இல்லாமலிருக்கக் கூடும். ஆனால் அவர்களின் இலக்கு ஒன்றே என்று கூறுவேன்.

யுத்தம் முடிவுக்கு வந்தபோது சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தொடர்பாகக் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களில் ஒருபகுதியினர் விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் அவர்கள் திரட்டப்படும் சாத்தியத்தை முழுமையாக நிராகரித்துவிட முடியாது. பிரிவினைவாதக் கருத்துகளை ஊக்குவிக்கும் ஆபத்துக் குறித்து அரசியல் கட்சிகள் அறிந்திருக்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழ்வளித்து படிப்படியாகப் புதிய அரசாங்கம் விடுவிக்கவுள்ள நிலையில் பிரிவினைவாத கருத்துகளை ஊக்குவிப்பதன் அபாயம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்

கருத்துகள் இல்லை: