ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

இந்திய தூதுவர் அசோக்

தொப்புள்கொடி உறவைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிக கரிசனை மே 5 இல் விசா அலுவலகம் அங்குரார்ப்பணம்

இந்திய தூதுவர் அசோக் காந்தாயாழ்.குடாநாட்டுக்கும் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவு இருப்பதைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிகளவுக்கு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, மே 5 ஆம் திகதி முதல் இந்திய விசா வழங்கும் அலுவலகம் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தமது உரையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இந்தப் புதிய அலுவலகம் அங்கு திறக்கப்பட்டதும் குடாநாட்டு மக்கள் விசா விண்ணப்பங்களை அங்கு பெற்றுக்கொண்டு திரும்பக் கையளிக்க முடியும்.கொழும்புக்குப் பயணம் செய்வதற்குப் பதிலாகத் தமது விண்ணப்பங்களை யாழ்ப்பாண அலுவலகத்திலேயே இனிமேல் சமர்ப்பிக்கக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் உட்கட்டமைப்பின் அபிவிருத்தியில் இந்தியா கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது;

இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால நட்புறவைக்கொண்ட நாடுகள். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவுகள் இருப்பதால் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் இந்தியா கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது.

யாழ்ப்பாணம் பலமான பொருளாதாரக் கட்டமைப்புக்கொண்ட பிரதேசம் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் அது மீண்டும் விரைவில் எழுச்சி கண்டு வருகிறது.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மீள்கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாக இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. வடபகுதிக்கான தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.

மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கும் மதவாச்சியிலிருந்து கே.கே.எஸ்.க்கும் இடையிலான புகையிரத மார்க்கங்களை அமைப்பதற்கு இந்தியா உதவி வழங்கும். அது மாத்திரமன்றி காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலையப்புனரமைப்புக்கு இந்தியாவின் உதவி வழங்கப்படும்.

இன்னும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் படகுச்சேவைகள்,விமானச்சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதே எனது விருப்பமாகவுள்ளது.

இந்த அபிவிருத்திப்பணிகளை இந்தியா,இலங்கை அரசம்ங்கத்துடனும் உள்ளூர் நிறுவனங்களுடனும் இணைந்து செய்ய விருப்பதால் உள்ளூர் நிறுவனங்களிலுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் .

அத்துடன், மோதல்கள் முடிவடைந்த பின்னர் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,இந்திய பாராளுமன்றத்தில் 12.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்தமையை நினைவு கூர்ந்த அவர், மோதல்களால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைப்பதற்கும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் சுகாதார மற்றும் வைத்திய சேவைகளுக்கும் இந்தியா உதவி வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்தியா விசா வழங்கும் உதவி நிலையமொன்று திறந்துவைக்கப்பட விருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் அறிவித்தார்.

இதுவரை இந்தியாவுக்கான விசாவிற்கு விண்ணப்பிப்பதாயின் கொழும்பிற்குச் சென்று விண்ணப்பிக்கவேண்டியநிலை காணப்பட்டபோதும் இனிமேல் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் கிளையின் ஊடாக விசாவிற்கான விண்ணப்பங்களை அனுப்பி விசாவைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவிருக்கும் இந்த அலுவலகத்தின் ஊடாக விசா விண்ணப்பங்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்க.கே. காந்தா மேலும் கூறினார்.

இந்தக் கண்காட்சித் திறப்பு விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் ,யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா,இலங்கை வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள்,யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை: