சனி, 24 ஏப்ரல், 2010

ஐ.தே.கவிலிருந்து விலக கண்டி மாவட்ட எம்.பி.அப்துல் காதர் தீர்மானம் _

ஐ. தே. க. முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய கண்டி மாவட்ட எம்.பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் முடிவு செய்துள்ளதாக அரச இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்சியில் அவர் வகிக்கும் ஏனைய பதவிகளிலிருந்தும் ராஜினாமாச் செய்யத் தாம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும்,

ராஜினாமாக் கடிதங்களை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அப்துல் காதர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"கண்டி மாவட்டத்தில், பொதுத் தேர்தலில் ஐ. தே. க. சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாமென்று கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

ரவூப் ஹக்கீமை கண்டியில் நிறுத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினேன். சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை இதன்மூலம் தோற்றம் பெறும் என்ற உண்மையையும் விபரித்தேன்.

ஆனால், அவர் எனது கருத்தை ஏற்கவில்லை. மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் மூலம் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் எனது கருத்தை கட்சித் தலைவர் ஏற்கவில்லை. அதனால் பொம்மையாக அப்பதவியில் இருக்க நான் தயாரில்லை. 21 வருடமாக ஐ. தே. க. எம்.பியாக இருந்த எனக்கு இப்போது கட்சியின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் சிங்கள மக்களின் வாக்குகள் சுமார் 40,000 வரை எனக்குக் கிடைத்து வந்துள்ளது. இந்த முறை 10,000 வாக்குகளே எனக்குக் கிடைத்தன. சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்றுப் போனமையே இதற்குக் காரணம்.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசம் இதற்குச் சான்று.

முஸ்லிம் – சிங்கள மக்கள் மத்தியிலான இந்த மனப்போக்குக்குக் காரணம் ஹக்கீம் கண்டியில் போட்டியிட்டதே. அது மட்டுமன்றி ஹக்கீம் போட்டியிடாமலிருந்தால் ஐ. தே. க. 5 ஆசனங்களைப் பெற்றிருக்கும். கட்சிக்கு ஆசனம் குறைந்ததற்கும் ஹக்கீமே காரணம்.

ஐ. தே. க. தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியலையும் பொருத்தமாக செய்யவில்லை. கட்சித் தலைமை எதேச்சதிகாரமாக செயற்பட்டுவிட்டது.

கொழும்பு முஸ்லிம்களுக்காக முன்னாள் எம்.பி. மஹ்ரூபை தேசியப் பட்டியல் மூலம் நியமித்திருக்க வேண்டும். கட்சிக்காக நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்தவர் அவர்.

மு. காவுக்கு இரண்டு பேரை வழங்கியதைக் கண்டிக்கின்றேன். இதில் ஒன்றை மஹ்ரூபுக்கு வழங்கியிருக்க முடியும்" என்றார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை: