புதன், 21 ஏப்ரல், 2010

திருகோணமலை தேர்தல்

இலங்கையில் மறுவாக்குப்பதிவை அடுத்து இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை பெறுகின்றது. அடுத்த இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், அதனையடுத்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றன.

இருந்தபோதிலும், திருகோணமலை மாவட்டத்துக்கான ஒட்டுமொத்த முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அங்கு ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது.

அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அந்த மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களும், இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.

இலங்கையில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு பகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்து முடிந்திருக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டிப் பகுதி மற்றும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிப் பகுதி ஆகிய இடங்களிலேயே இன்று வாக்குப் பதிவு நடந்திருக்கின்றது.

கும்புறுப்பிட்டியில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும், நாவலப்பிட்டியில் முப்பதியேழு வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடந்தது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை, தேர்தல் முறைகேடுகள் காரணமாக மறுவாக்குப் பதிவு நடப்பது இதுதான் முதல் தடவையாகும்.

இந்த இரு இடங்களிலும் மறு தேர்தல் நடப்பதால், நாடாளுமன்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இரு இடங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: