சனி, 13 நவம்பர், 2010

சாதனைப் பெண் பாத்திமா


நேர் காணல் :
ஸ்டார் ராkக்
பெண்கள் தம் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒரு போதும் முன்னேற முடியாது. வருவது வரட்டும் என்று தைரியத்தை துணைக்கழைத்து சவால்களைச் சமாளித்து வாழ்க்கையில் முன்னேற வழி காண வேண்டும். நானும் வாழ்க்கையிலே சொல்லொணாக் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்தவள் தான். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் படாத கஷ்டங்கள் இல்லை. நான் ஏங்கி அழாத நாட்களும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் பட்ட கஷ்டங்களும் துன்பங்களுமே என்னைப் புடம் போட்டன. கண்ணீரில் நீராடி பட்டினியில் படுத்துறங்கி பழக்கப்பட்ட எனக்கு ஆண்டவன் காட்டிய வழியே இது.

இவ்வாறு தெரிவித்தார் இவ்வாண்டின் இளம் உற்பத்தியாளருக்கான சர்வதேச விருது பெற்ற முஸ்லிம் பெண் வர்த்தகரான தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா நிஸ்ரீன் றம்ஸி.

அவர் தனது கதையை இவ்வாறு தொடங்கினார், மாத்தறை மாவட்ட வலஸ்முல்ல பிரதேசத்திலுள்ள மீயெல்ல கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் மூன்று வயதாக இருக்கும் போதே தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தேன். மாத்தறை மீயெல்ல அல்-மினா வித்தியாலயத்தில் தரம் 9 வரை கல்வி கற்றேன்.

சிறு வயது முதலே கல்வியில் சிறந்து விளங்கினேன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவி.

எனது தாயாரும் சகோதரரும் கூட ஆசிரியர்களே. அவர்களின் இடமாற்றங்களுக்கேற்ப நாமும் இடம் மாறி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம். இறுதியாக அம்பாந்தோட்டை ஸாஹிறா தேசிய பாடசாலையில் சேர்ந்து 10ம் வகுப்பில் கல்வி பயின்றேன். எனினும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அது எனது துரதிர்ஷ்டம் தான் என்று நான் என்னையே நொந்து கொண்டேன்.

அப்போதுதான் எனக்குத் திருமணம் நிறைவேறியது. அறியாத வயது அது. வாழ்க்கையை சமாளிப்பது சற்றுக் கடினமாகத் தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து சவால்களை சமாளித்து வாழ்ந்தோம். எனது கணவர் தான் பெற்றிருந்த பயிற்சிக்கேற்ப சிறு அளவிலான ஒரு வெல்டிங் கடையை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானம் எங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்தக் கூட போதுமானதாக இருக்கவில்லை.

காலம் ஒடிக்கொண்டிருந்தது. ஐந்து பிள்ளைகள் பிறந்தன. குறைந்த வருமானத்தில் மிகவும் கஷ்டத்தோடு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ்ந்து வந்தோம். இருந்ததைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டுப் பட்டினியில் படுத்துறங்கிய நாட்களும் உண்டு.

இப்படி இருக்கையில்தான் ஆழிப் பேரலை எங்களைத் தேடி வந்தது. கடற்கரையை அண்டி அமைந்திருந்த கணவரின் வேலைத்தள உபகரணங்களையும் உடன் சுருட்டிக் கொண்டு அந்த சுனாமி நல்ல வேளையாக எங்களை உயிரோடு விட்டுச் சென்றது. எனினும் எங்கள் நிலை முன்னரை விடவும் மோசமாகியது. எப்படியோ எதிர்நீச்சல் போட்டோம்.

கஷ்ட நிலைமையில் வாழ்ந்த நீங்கள் இன்று உயர்ந்து நிற்கிaர்களே உங்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்ன? என்று கேட்டேன்.

ஒவ்வொரு நாளும் நான் எனது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்ற பின்னர் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். ஒரு போதும் நான் ஆடல் பாடல் காட்சிகளையோ படங்கள் நாடகங்களையோ பார்ப்பதில்லை. வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அவசியமான குறிப்பாக பெண்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சிகளையே பர்ப்பதுண்டு.இந்த அடிப்படையில் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் என்னைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் ‘நுகசெவன’ எனும் மாதர் நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை நாள் தவறாமல் பார்ப்பேன். பெண்களின் சுயமுன்னேற்றத்துக்கான தகவல்களும் அது தொடர்பான செய்முறைப் பயிற்சிகள் என்பனவும் சிறந்த முறையில் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. இதில் ஒளிபரப்பாகும் ஆடை தைத்தல், மற்றும் தோல் பைகள் தைத்தல் உட்பட மற்றும் பல பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் நன்கு அவதானித்து வீட்டில் தனியாக செய்து பார்த்து பழகினேன். சில நாட்களிலேயே என்னாலும் அவற்றை எல்லாம் திறம்படச் செய்ய முடிந்தது.

கணவரின் வருமானம் போதா நிலையிலும் நானும் வெறுமனே பொழுது போக்கி கொண்டிருப்பதைவிட தொலைக்காட்சி மூலம் பெற்றுள்ள பயிற்சியின் மூலம் பயன் அடைந்தால் என்ன என்று சிந்தித்தேன். கணவரும் சம்மதித்தார். 50,000 ரூபா சுயதொழில் கடன் பெற்று ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒரு சிறிய அறையில் கணவரின் பெயரை முதன்மையாகக் கொண்டு ‘றம்ஸி பெஸன்’ என்ற பெயரில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தேன். அங்கு நானே ஆடைகளையும் தோல் பைகளையும் தைத்து விற்பனையில் ஈடுபட்டேன். பின்னர் தையல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். எனது கணவரும் பிள்ளைகளும் எனது முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இவ்வாறாக நாளும் பொழுதும் அதன் வளர்ச்சி ஓங்கியது.

எனது தொழில் துறையில் சர்வதேச ரீதியிலான போட்டி ஒன்று இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்குமாறும் வணிகர் கழகம் எனக்கு அறிவுரை வழங்கியது. நானும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தேன். நாடளாவிய ரீதியில் விண்ணப்பித்தவர்களுள் தகைமைத் தேர்வுக்காக நான் உட்பட 12 பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தோம். பின்னர் இது தொடர்பான இறுதிப் போட்டியில் பங்கு பற்ற மெக்ஸிகோ செல்ல நான் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். சில நாட்களில் அழைப்பும் கிடைத்தது.... அதன் பிரகாரம் நானும் என் கணவரும் மெக்ஸிகோ சென்றோம். செப்டம்பர் மாதம் 23ம் திகதி இரவு இறுதிப் போட்டி நடந்தேறியது. இவ் வைபவத்திலே பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் பிரதம அதிதியாக செய்மதியின் ஊடாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டியில் மொத்தமாக 38 நாடுகள் கலந்து கொண்டன. வல்லரசுகளிலிருந்தும், அபிவிருத்தி அடைந்த நாடுகளிலிருந்தும் வந்த பலரும், சர்வதேச ரீதியில் பல கிளை நிறுவனங்களைக் கொண்ட பாரிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலரும் கூட இதில் கலந்து கொண்டனர். நானோ ஒரு சிறிய அறையில் துணைக்கு ஒரே ஒரு பெண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு அன்றாட சோற்றுக்காக தைத்துப் பிழைப்பவள். அவர்களைக் கண்டு ஒரு வித அச்ச உணர்வு தோன்றினாலும் இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்து என்னைப் போன்றதொரு சிறிய பெண்ணுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டியதை எண்ணிப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

போட்டியின் முதல் சுற்று முடிவடைந்து விட்டது. இறுதிச் சுற்றுத் தேர்வுக்கு நான்கு நாடுகள் மட்டுமே தெரிவாகின. உலகின் பிரபல கைத்தொழில் நாடுகளான இந்தியா, கனடா, ஹொங்கொங் ஆகியன இதில் இடம் பெற்றிருந்தன. அடுத்த நாடு ஸ்ரீலங்கா என்றதும் எனக்கு மகிழ்ச்சி தாழவில்லை. ஆண்டவனிடம் பிரார்த்தித்தேன் ஆறுதல் பரிசொன்றாவது கிடைக்க வேண்டும் என்று.

இறுதிச் சுற்றுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லாப் பொறுப்பையும் இறைவனிடமே சாட்டி விட்டு அமைதியாக இருந்தேன். தெரிவு முடிந்து விட்டது. பெறுபேறு பிரதம அதிதிக்குப் பறந்தும் விட்டது. முடிவு வெளியிடப்பட வேண்டியது மட்டும் தான் பாக்கி. செய்மதியூடாகக் காட்சி தரும் பிரதம அதிதி இளவரசர் சார்ள்ஸ் பெறுபேற்று அறிக்கையைக் கைகளில் தாங்கி வாசிக்கிறார். போட்டியின் வெற்றியாளராக ஸ்ரீ லங்கா என்று ஆரம்பித்து எனது பெயரை அவர் உச்சரித்தார்.

ஆச்சரியம் தாளவில்லை. கண்கள் பனிக்கின்றன. கடந்த காலம் ஒரு கணம் என் முன்னே தோன்றுகிறது. கூட இருந்தவர்களும் கூடி இருந்தவர்களும் என்னைக் கரகோஷம் செய்து கைலாகு தந்து பாராட்டுகிறார்கள்.

இதற்கு மத்தியில் நான் பேசுமாறு அழைக்கப்பட்டேன். எனது உரையின் போது நான் நடந்து வந்த கரடு முரடான பாதையைப் பற்றி அவர்களுக்கு விபரித்தேன். பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். எனது வெற்றிக்குக் காரணம் எனது விடாமுயற்சியும், நேர்மையும், துணிவும், பக்தியுமே என்பதையும் எடுத்துச் சொன்னேன். இறுதியாக இளவரசர் சார்ள்ஸ¤க்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததோடு அன்னாரை நேரடியாக சந்தித்து நன்றி கூறும் வாய்ப்புக் கிடைத்தால் அதனைப்பெரும் பேறாக மதிப்பேன் எனவும் கூறினேன். உடனடியாக இதற்கு செய்மதி மூலம் பதிலளித்த அவர் நவம்பர் மாதத்தில் இராப்போசன விருந்தொன்றினை வழங்கி என்னைக் கெளரவிக்க தீர்மானித்துள்ளதாகவும் அதல் கலந்து கொள்ள இங்கிலாந்துக்கு வருகை தருமாறும் எனக்கு அழைப்பு விடுத்தார். அதன் பிரகாரம் நவம்பர் மாதம் 15ம் திகதி நானும் துணைவரும் அங்கு செல்ல உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்களது எதிர்காலத் திட்டம் என்ன என வினவினேன். நான் தற்போது ஈடுபட்டுள்ள துறையை மேலும் முன்னேற்றி சிறந்ததொரு நிலைமைக்கு வர வேண்டும். ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பயனும் பெருமையும் ஏற்பட வழி செய்ய வேண்டும். எனது வாழ்க்கையையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டும். முடிந்த வரை உதவி செய்து குடும்பத்தினரையும் சுற்றத்தாரையும் கவனிக்க வேண்டும். என்னைப் போல் பிறரும் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது. எனவே, ஏழை எளியோருக்கு உதவி புரிந்து வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றார். இதற்காக அரசாங்கம் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று கூறியதோடு ஒரு ஆதங்கத்தையும் இவ்வாறு வெளியிட்டார்.

இந்த சின்னஞ்சிறு தீவிலிருந்து சென்று முன்னணி கைத்தொழில் நாடுகளோடு போட்டியிட்டு வெற்றியீட்டி விருது பெற்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ள என்னை அரசாங்கம் இன்று வரை கண்டு கொள்ளாதிருப்பது கவலையாக இருக்கிறது. இதனை நான் எப்படி அரசுக்குத் தெரிவிப்பது என்பது பற்றியும் எதுவும் எனக்கும் தெரியாது. இந்த வழியில் எனக்கு உதவ யாராவது முன்வரும் பட்சத்தில் நான் நன்றியுடையவளாக இருப்பேன். நான் வாழும் வீட்டில் இன்னும் ஜன்னல் கதவுகள் கூட இல்லை. இந்த நிலைமையில் வாழ்ந்து கொண்டும் தான் விடா முயற்சியால் முன்னேறி வர்த்தக ரீதியில் என் நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி வைத்துள்ளேன். என் பணிகளை மேலும் வளர்க்க அரசு உதவ வேண்டும் என்றார்.

இன்றைய பெண்கள் சமுதாயத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன? என்று கேட்டேன்

வாழ்க்கையில் எதிர்ப்படும் கஷ்டங்களை எண்ணி சதா கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு நாளும் வாழ்க்கை ஒளி பெற மாட்டாது. எதற்கும் முயற்சி வேண்டும். நாடு நாடாகச் சென்று சிரமத்தை விற்று அல்லல்பட்டு சம்பாதிப்பதை விடுத்து தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும் உயரிய நோக்கோடு ஒவ்வொரு பெண்ணும் சொந்த மண்ணில் தத்தமது கலாசார வழி முறைகளுக்கு உட்பட்டு நீதியான, நியாயமான, நேர்மையான வழி முறைகளில் பொருள் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. எனவே பெண்கள் சமூகம் குறிப்பாக முஸ்லிம் சகோதரிகள் உரிய வரையறைக்கு உட்பட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டால் குடும்ப சுமையும் தளர்ந்து கஷ்டங்களும் களைந்து மகிழ்ச்சியாக வாழ வழி கிட்டும் என்றார்.

வியாழன், 6 மே, 2010

118 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்


ஐ.தே.க., ஜ.தே.மு. வெளிநடப்பு: காதர் ஆதரவு; விஜயகலா, ரங்கா எதிர்ப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்யப்பட்ட அவசர காலச்சட்டம் மீதான பிரேரணை 118 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரேரணையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன நேற்று சபையிலிருந்து வெளியேறின.

புதன், 5 மே, 2010

அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் களாக நால்வரும், பிரதியமைச்சர்களாக ஆறு பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட னர். ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களினதும், பிரதியமைச்சர்களினதும் விபரம் வருமாறு: மைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

மீண்டும் படைப் பிரிவைஉருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள்.

கொழும்பு: மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர். இதற்காக படைப் பிரிவை உருவாக்கும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் இதுகுறித்துப் பேசுகையில், சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டத்திற்காக புலிகளின் படைப்பிரிவு மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அவசர நிலை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

வெளிநாட்டில் பணிபுரிவோர் நலன்:

சமூக பாதுகாப்பு நிதியம் ஆரம்பிக்க வெளிநாட்டு பணியகம் நடவடிக்கை
வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்களின் நலன்களைப் பேணவும் அவர்களின் தொழில்களைப் பாதுகாக்கவும் என சமூக பாதுகாப்பு நிதியமொன்றை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவசரகால சட்டத்தின் 38 விதிகள் முற்றாக நீக்கம்


அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38 ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

செவ்வாய், 4 மே, 2010

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில்

வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்த்த புதிய ஐதேக நாளை உதயமாகும் : கயந்த கருணாதிலக

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக கட்சியின் செயற்குழு நாளை கூடவுள்ளது. பெரும்பாலும் மக்கள் எதிர்பார்த்த புதிய ஐக்கிய தேசியக் கட்சியை மே மாதம் ஐந்தாம் திகதிக்கு பின்னர் எதிர்பார்க்கலாம் என ஐ.தே.க. வின் பேச்சாளர் கயந்த கருணாதிலக எம்.பி. தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

திங்கள், 3 மே, 2010

நாடு கடந்த அரசமைக்கும் புலிகளின் முயற்சி முறியடிக்கப்படும்

நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு ஜனாதிபதி மஹிந்த பொது மன்னிப்பு

பிணையில் விடப்பட்டிருந்த ஊடகவியலா ளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்துக்கு உலக ஊடக சுதந்திர தினமான நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

ஞாயிறு, 2 மே, 2010

விதவைகள் மறுவாழ்வு திட்டம்;ரூ. 25 கோடி வழங்க இந்தியா இணக்கம்

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்க இணக்கம் தெரிவி த்துள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் திருத்தம்

சபையில் நாளை சமர்ப்பிக்க அரசு தீர்மானம்; அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விளக்கம்

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்து நாளை 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சனி, 1 மே, 2010

அவசரகாலச் சட்டம், பொன்சேகா விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை _

இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம்.

யாழ்.பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர்-பாதுகாப்பு செயலாளர் _

யாழ்.குடாநாட்டில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்க ளில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து வெகு விரைவில் வெளியே றுவதுடன் அவற்றை உரிமையாளர்களிடம் உடன் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம்

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-

பயங்கரவாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்துகொண்ட ஒரு தலைவன் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது முன்னேற்றப் பாதையில் தடையாகவிருக்கும் எல்லா சவால்களையும் வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையுடன் அடையப்பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

உழைக்கும் மக்களுக்கு வெற்றி கிட்டுமாகுக.

வவுனியா நிவாரண கிராமத்தில் கருணாவுக்கு கண்ணீர்மல்க வரவேற்பு

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல்முறையாக வவுனியா நிவாரணக் கிராமத்திற்கு நேற்று விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மானை) மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள எஞ்சியுள்ள மக்களையும் வெகு விரைவில் மீளக்குடியமர்த்துவதுடன் வெளிநாடுகளின் உதவியுடன் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்தார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு நேற்று வருகை தந்திருந்த இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உதவித்தூதுவரையும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மீள்குடியேற்றப்பட்ட மற்றும் மீள்குடியேறவுள்ள மக்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கருணா அம்மான் நேற்றுத் தெரி வித்தார்.

நிவாரணக் கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர் கருணா அம்மான் மக்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குள்ளும் சென்று பார்வையிட்டார்.

இடம் பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக வெளிநாடுகளின் உதவிகளைப் பெறும் நோக்கில் அடுத்தவாரம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களையும் தாம் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டிலும் கலந்து கொண்ட கருணா அம்மான், அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலதிக அரச அதிபர் என் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பல அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதியும் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் என குறிப்பிட்ட பிரதி அமைச்சர் முரளிதரன் வன்னி மக்களுடைய வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த புதிய அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது எனவும் கூறினார்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை

புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப் பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தவறான பிரசாரங்களுக்கு
எதிராக இராஜதந்திர நடவடிக்கை

ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும்.

நாடு கடந்த தமிbழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலைய மைப்பை முறியடித்து இல்லாதொழி ப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும், இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார்.

இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது.

இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்ட நேற்றைய விழாவில் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, அவரது பாரியார் மஞ்சுளிகா ஜயசூரிய, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப்படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க, வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, மேஜர் ஜெனரல் சாகி கால்லகே உட்பட வன்னி படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட படைப்பிரிவுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.

அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.