சனி, 1 மே, 2010

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.

அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: