வியாழன், 6 மே, 2010

118 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்


ஐ.தே.க., ஜ.தே.மு. வெளிநடப்பு: காதர் ஆதரவு; விஜயகலா, ரங்கா எதிர்ப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்யப்பட்ட அவசர காலச்சட்டம் மீதான பிரேரணை 118 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரேரணையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன நேற்று சபையிலிருந்து வெளியேறின.


ஆயினும், ஐ.தே.க.வைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், ஜே. ஸ்ரீரங்கா ஆகியோர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர். அதேநேரம், தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்த போதும் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவசரகாலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்.

அவசரகாலச் சட்டத்திற்கான பிரேரணையை பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழமையாக அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் ஒரே தினத்தில் நடத்தப்பட்டு வந்தது. எனினும் இம்முறை அவசரகாலச் சட்டத்தினுள் உள்ள ஒழுங்கு விதிகள் சில முற்றாக நீக்கப்பட்டும், சில ஒழுங்கு விதிகள் திருத்தப்பட்டும் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பிரேரணை மீதான விவாதம் நேற்று முன்தினமும், நேற்றும் இரண்டு தினங்களாக நடைபெற்றன.

இரண்டு தினங்களாக நடைபெற்ற விவாதத்தின் பின்னர் இறுதிநாளான நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: